Namma Madurai App

Namma Madurai App

கோரிக்கைகளை நிறைவேற்றுவர்களுக்கு 2026 சட்டசபை தேர்தலில் ஆதரவு; ரெட்டி நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

கோரிக்கைகளை நிறைவேற்றுவர்களுக்கு 2026 சட்டசபை தேர்தலில் ஆதரவு; ரெட்டி நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்

31 days ago 23 Feb 2026

Share this story

திருமங்கலம்: ரெட்டி சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுக்கு 2026 சட்டசபை தேர்தலில் முழு ஆதரவு அளிக்கப்படும் என மதுரை மாவட்டம் திருமங்கலம் ராயபாளையத்திங் நடந்த தமிழ்நாடு ரெட்டி நலச்சங்க தென் மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரெட்டியார்களில் உரிமை மீட்பு தென் மண்டல மாநாட்டை ரெட்டி நலச்சங்க மாநில தலைவர் ரவி கொடியேற்றி துவக்கி வைத்தார். நிர்வாகிகள் முத்தமிழ், செல்வி, தேவசேனா, சித்ரா, கஸ்தூரி, புஷ்பலதா குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மாநில பொதுச் செயலாளர் ராஜா பூர்ண சந்திரன் வரவேற்றார்.

'ரெட்டி அரசாட்சிகளின் வரலாறு' என்ற நூலை புதுச்சேரி எம்.பி. வைத்தியலிங்கம் வெளியிட தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் வேந்தர் சீனிவாசன் பெற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா ரெட்டி சமுதாய பாடல்களின் குறுந்தகட்டை வெளியிட சென்னை ஜே.எஸ்.ஆர். இன்ஃப்ரா டெவலப்பர் நிறுவன சேர்மன் சேகர் பெற்றார். ரோஜாவிற்கு சங்க நிர்வாகிகள் வீரவாள் பரிசு அளித்தனர்.
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசு தோட்டத்தை ஓமாந்தூரார் அரசினர் தோட்டம் என பெயர் மாற்றம் செய்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தும், முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா ஓமந்தூரில் 1.35 ஏக்கரில் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டிய தமிழக அரசு நன்றி தெரிவித்தும், ஓமாந்தூரார் தோட்டத்தில் தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஓமந்தூர் ராமசாமி ரெட்டிக்கு ஆள் உயர வெண்கல சிலை வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு பெற தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரெட்டி இனத்தின் உட்பிரிவுகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக சான்றிதழ் வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும். மத்திய அரசு பட்டியலில் முற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள ரெட்டி சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் அமைச்சர் ரோஜா தெலுங்கில் பேசியதாவது: இது குடும்ப மாநாடு. நம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும். தற்போது உள்ள அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக மட்டுமே நம்மை பயன்படுத்துகிறார்கள். நம் சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் இருந்து நம் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்றார்.

சங்க மாநில தலைவர் ரவி பேசுகையில், 'ரெட்டி சமுதாயத்திற்கு தேவையான கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கும் கட்சிகளுக்கு 2026 சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும்." என்றார்.

Namma Madurai

Local News & Updates

More News