Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
அரசு மருத்துவமனைக்கு விடியல் கிடைக்குமா சோழவந்தான் மக்கள் ஏக்கம்
28 days ago
28 Feb 2026
சோழவந்தான் அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர்கள், வசதிகள் பற்றாக்குறை, மெதுவாக நடக்கும் கட்டட பணிகள் போன்றவற்றால் அப்பகுதி பொதுமக்கள் தவியாய் தவிக்கின்றனர்.இம்மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், போதுமான எண்ணிக்கையில் உள்ளனர் ஆனால் மகப்பேறு செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், துாய்மை பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை இதனால் தினக்கூலி அடிப்படையில் 2 மருத்துவ பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சம்பளத்தை மருத்துவர்களே வழங்கி ஆண்டு பராமரிப்பு நிதி வரும்வரை காத்திருந்து பெறுகின்றனர் மேலும் வாடச் மேன் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.இரவில் போதை இளைஞர்களின் அட்டகாசத்தால் நோயாளிகள், உடனிருப்போர் அச்சத்தில் தவிக்கின்றனர். 'போஸ்ட்மார்ட்டம்' செய்ய வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இங்கு மேம்படுத்தப்பட்ட வசதிகள் இல்லாததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.அப்பகுதி ராமச்சந்திரன் கூறியதாவது; இங்கு சாதாரண நோய்கள், தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கே சிகிச்சை அளிக்கின்றனர்.
மற்ற சிகிச்சைகளுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர். 'எக்ஸ்-ரே, 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி கூட இல்லை. கட்டடத்தை மட்டும் கட்டுவதால் மக்களுக்கு பயனில்லை. மருத்துவமனையை தரம் உயர்த்தி அனைத்து வசதிகளும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார். அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டுமான பணிகளும் விரைந்து முடிக்கப்படும். மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படுவது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்' என்றனர்.
Namma Madurai
Local News & Updates