மதுரை: மதுரையில் இரண்டாவது நாளாக மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்துணவு ஊழியர் சங்கத்தினர், ஐ.சி.டி.எஸ். எனும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆக்டோ ஜியோ கூட்டமைப்பில் செயல்படும் இவர்கள் காலமுறை ஊதியம், ஓய்வூதியமாக மாதம் ரூ. 6750 வழங்க வேண்டும். கருணைத்தொகை முறையே அமைப்பாளர்களுக்கு ரூ. 10 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
இதற்காக காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மறியல் நடத்தினர். 2 வது நாளாக நேற்றும் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மேகலா, அங்கன்வாடி ஊழியர்களின் மாவட்ட தலைவர் அங்காளாஸ்வரி தலைமையில் பலர் பங்கேற்றனர். சங்க முன்னாள் துணைத் தலைவர் சோலையன், ஆக்டோ ஜியோ மாநில இணை அமைப்பாளர் ஆரோக்கியதாஸ், நிதிக்காப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், கிராம உதவியாளர் சங்க மாநில துணைத் தலைவர் மாரியப்பன். நிர்வாகிகள் மணிகண்டன், அழகேசன், ஜெய்கணேஷ் பேசினர். வேலை நிறுத்தத்தால் பள்ளிகளில் சத்துணவு பணிகள் பாதித்துள்ளன. இருப்பினும் காலை உணவு வழங்குவோரை வைத்து அரசு சமாளித்து வருகிறது.
Namma Madurai
Local News & Updates